அதில், பலாத்கார சம்பவத்துக்கு முன்னர் காய்கறி வியாபாரியிடம் அந்த சிறுவன் கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி 6 காம கொடூரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு வெட்ட வெளியில் நிர்வாணமாக தூக்கி வீசப்பட்டார்.
டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவியின் உடல் நிலை மோசம் ஆனதால், மேல் சிகிச்சைக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ம் திகதி பரிதாபமாக இறந்தார்.இந்த கொடூர சம்பவத்தையொட்டி பஸ் டிரைவர் ராம்சிங், அவரது தம்பி முகேஷ், அவர்களின் நண்பர்களான பவன்குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் தாகூர் ஆகியோரையும் அவர்களுடன் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனையும் பொலிசார் கைது செய்தனர். கைதான சிறுவனை, சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் போலீசார் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதான மற்ற 5 பேர் மீதும் கடத்தல், பலாத்காரம், கொலை, குற்றச் சதித் திட்டம் தீட்டியது, வழக்கிற்கு தேவையான முக்கிய தடயங்களை அழித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவன் மீது தனியாக சிறுவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர டெல்லி பொலிசார் முடிவு செய்தனர். அதன்படி டெல்லியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகையை பொலிசார் தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்வதற்கு முன்னர் காய்கறி வியாபாரி ராமதார் சிங்கிடம் அந்த சிறுவன் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறுவர் நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment